Movies
PATTAS (TAMIL) MOVIE REVIEW

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சடா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பட்டாஸ். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
நவீன் சந்திரா நடத்தும் நிலன் கிக் பாக்ஸிங் அகடமியில் தனுஷை எதார்த்தமாக சந்திக்கும் சினேகா அதிர்ச்சி அடைகிறார். இருவரும் யார் ? நவீன் சந்திராவிற்கும் அவர்களுக்கும் என்ன சம்மந்தம் என்பதை சொல்லியிருக்கும் படமே பட்டாஸ்.
பட்டாஸ் என்கிற சக்தி , திரவிய பெருமாள் என்ற இரண்டு விதமான கதாப்பாத்திரம் தனுஷிற்கு. இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் உள்ள வயது வித்தியாசம், பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவற்றை தனது யதார்த்தமான நடிப்பால் கண்முன் கொண்டுவந்திருக்கிறார். கன்னியாகுமரியாக சினேகா. தன் கணவனை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் பெண்ணாகவும் பாசமான தாயாகவும் நடிப்பதற்கு கனமான வேடத்தை திறம்பட கையாண்டிருக்கிறார்.
வில்லனாக நவீன் சந்திரா. பலம் பொருந்திய வில்லனாக மிரட்டலாக நடித்திருக்கிறார். மெஹ்ரின் பிர்சடா படத்தின் காதல் அத்தியாயங்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார். தனது இன்னஸென்டான டயலாக் டெலிவரியால் முதல் பாதியில் சுவாரஸியப்படுத்துகிறார் KPY சதீஷ் . நாசர் , முனிஷ்காந்த், மனோபாலா உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்துள்ளனர்.
விவேக் – மெர்வின் கூட்டணியும் பின்னணி இசையும் படத்துக்கு ஆகப்பெரும் பலமாக அமைந்திருந்தது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.
அடிமுறை என்ற கலையை பற்றி சொன்ன விதமும் அதனை திரைக்கதையில் கையாண்ட விதமும் படத்தை சுவாரஸியப்படுத்தியது. முன் பாதியில் வரும் காதல் காட்சிகள் அவ்வளவு சுவாரஸியமாக இல்லை. தமிழ் கலைகளையும் கலாச்சாரங்களையும் கமர்ஷியல் சினிமாவாக சொன்னவிதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த பட்டாஸ்.Verdict: நமது தற்காப்புக் கலையை மையப்படுத்தும் கமர்ஷியல் எண்டர்டெயினர் இந்த ‘பட்டாஸ்’, தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு சிறப்பு