Movies
SANGATHAMIZHAN (TAMIL) MOVIE REVIEW

விஜய் சேதுபதி, சூரி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் , உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சங்கத்தமிழன். விஜயா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.
முருகனாக விஜய் சேதுபதி சினிமாவில் நடிகராக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் தேனி அருகே ஒரு கிராமத்தில் காப்பர் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் . இந்த பிரச்சனையில் எதிர்பாராத விதமாக விஜய் சேதுபதி தலையிட வேண்டிய நிலைமை வருகிறது. அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதே படத்தின்கதை
படத்தில் கிராமத்து இளைஞன் , சினிமாவில் சாதிக்க துடிக்கும் நடிகன் என இரண்டு விதமான வேடம் விஜய் சேதுபதிக்கு. அதனை முடிந்த வரை வெவ்வேறு விதமான முக பாவணைகள், டயலாக் டெலிவரி என வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். படம் முழுக்க அவர் அசால்டாக பிரச்சனைகளை கையாளும் விதம் படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகிறது.
கதாநாயகிகளாக ராஷி கண்ணாவும் நிவேதா பெத்துராஜூம் வசீகரிக்கிறார்கள். விஜய் சேதுபதியின் நண்பனாக தனது வெகுளித்தனமான நடிப்பால் சிரிக்க வைக்கிறார் சூரி. வில்லன்களாக ரவி கிஷன், ஆஷுதோஸ் ராணா ஆகியோர் தங்களுக்கு கொடுக்கபட்ட பணியை சரியாக செய்திருக்கிறார்கள். மேலும் நாசர், ஸ்ரீமன், சவுந்தர ராஜா உள்ளிட்டோர் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு விவேக் – மெர்வின் கூட்டணியின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது ஒளிப்பாளர் வேல்ராஜின் கேமரா.
காதல், காமெடி என முதல் பாதி சுவாரசியமாக நகர்கிறது. ‘எமோஷனலாக இருக்கும் போது நம்ம மூளை லாஜிக்கா யோசிக்காது’ என்பது போன்ற வசனங்கள் நன்றாக இருந்தது. எதையும் பாஸிட்டிவாக அணுகும் முருகன் என்ற விஜய் சேதுபதியின் கேரக்டர் முதல் பாதியில் படத்தை சுவாரசியமாக கொண்டு செல்ல உதவியிருக்கிறது.
இரண்டாம் பாதியில் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்சனை, அதனை அவர் கையாளும் விதம் ஒரே டெம்பிளேட்டில் படம் நகர்கிறது. விஜய் சேதுபதி யார் அறியும் வரை படத்தில் இருந்த சுவாரசியம் அதன் பிறகு குறைகிறது. ஹீரோயிஸமாகவே இருந்தாலும் படத்தின் முக்கிய பிரச்சனைகளையும் அடிதடியாலேயே சரி செய்வது போன்ற காட்சிகள் படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது.
முதல் பாதி பொழுதுபோக்கு கவனம் ஈர்க்கிறது, இரண்டாம் பாதி கொஞ்சம் சுவாரஸியமாக இருந்திருக்கலாம், ஆனாலும் இந்த சங்கத்தமிழன் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக் கூடிய கமர்ஷியல் படம்.
Verdict: Verdict: ஜனரஞ்சகமான விஜய் சேதுபதியின் நடிப்பு, சுவாரஸியமான முதல் பாதி என இந்த சங்கத்தமிழனுக்கு விசிட் அடிக்கலாம்